Readers, please enter your email ID and subscribe for regular updates and notifications.

Monday, May 20, 2013

பழனி மூட்டை சாமிகள் - ஒரு பக்தரின் அனுபவம்

பழனி மூட்டை சாமிகள் - ஒரு பக்தரின் அனுபவம்


மூட்டை சாமிகளின் பதிவை படித்த பக்தர் ஒருவர் அனுப்பிய மின்-அஞ்சல்


விநாயக பெருமான் மலரடிகள் போற்றி!! போற்றி !!!
முதல்வனே முத்தி நலம் சொன்னவனே ,
கண நாதனே அருள் புரிய வேண்டுகிறேன்...


குரு வணக்கம்
பாமரன் உருவில் வந்த பரமனே
பக்தனின் பாவத்தை மூட்டையாக சுமக்கும் இறைவனே,
பழனி கனக்கன்பட்டியில் வாழும் கடவுளே
எல்லை இல்லா கருணை மாக் கடலே
ஏற்றி வைத்த தீபத்தின் ஒளியே ,
எங்கள் சற்குரு ஞான வள்ளலே ,
நின் பாதம் போற்றி போற்றி !!!
முதல்வனே முத்தி நலம் சொன்னவனே ,
கண நாதனே அருள் புரிய வேண்டுகிறேன்...
நம் பாரத தேசத்தின் பெருமை அனைத்தும் நம் கடவுளை வழிபடும் முறையே சாரும் என்பதில் எந்தவொரு மாற்று கருத்தும் இல்லை. ஏனென்றால் நம் முன்னோர்கள் பிரபஞ்ச ரகசியத்தை நெடுங்காலமாக ஆராய்ந்து எப்படி இந்த ஜீவாத்மா அந்த பரமாத்மாவுடன் இரண்டற கலப்பது என்ற ஆன்ம அறிவை பெற்று இருந்தனர். கருவில் பிறந்த மனிதனும் தெய்வ நிலையை அடையலாம் என்பதை நமக்கு முன்னர் வந்த குரு மார்கள் அனைவரும் பிறந்து, வளர்ந்து, வணங்கி , அறிந்து ,உணர்ந்து , போதித்து  இறை தன்மையை அடைந்து வழி காட்டி இருக்கிறார்கள். நாம் ஒவ்வொருவரும் அவர்களின் வழிகாட்டுதல் படி நடந்து நம் வாழ்வியலில் கடைபிடித்து , அவர்களின் அருள் உணர்வுகளை பெற்று உணர்ந்து எல்லாம் வல்ல அருட் பெரும்ஜோதி ஆண்டவருடன் கலந்து மரண மில்லா பெரு வாழ்வு பெறுவதே இந்த ஆத்மா, மனித உரு எடுத்ததின் பயன்..
ஞான வள்ளல் சற்குரு பழனி மூட்டை சுவாமிகள்

அப்படி நம்மோடு வாழ்ந்து கொண்டு ,பக்தர்களின் பாவங்களை மூட்டையாக சுமந்து , உலகம் மெங்கும் தம் பக்தர்களை காத்து ரட்சித்து அருள் புரியும் பழனி கனக்கன் பட்டியில் வாழும் ஞான வள்ளல் சற்குரு பழனி மூட்டை சுவாமிகள் மலரடிகள் போற்றி போற்றி !!!

சற்குரு நாதரே, எம் இறைவனே உங்களின் பாதம் பணிந்து வணங்கி உங்களை தரிசித்த பாக்கியத்தையும் , அதனால் அடியேனின் வாழ்கையில் ஏற்பட்ட மாற்றத்தையும் எழுதுவதற்கு அருள் புரிய வேண்டுகிறேன்...

அடியேன் சுமார் மூன்று வருடங்களுக்கு முன்பு கரூரில் வேலை செய்து கொண்டு இருந்தேன். கரூரில் உள்ள கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலுக்கு தினமும் சென்று அர்த்தஜாம பூஜையும், அதனை தொடர்ந்து காணவே கண் கோடி வேண்டும் பள்ளியறை பூஜையும் தரிசிக்கும் பாக்கியத்தை பெற்று  இருந்தேன். மேலும் ஒவ்வொரு வியாழக்கிழமையும் கரூரில் உள்ள ஷிர்டி சாய் நாதரையும் தரிசிக்கும் பெரும் பேற்றினை பெற்று இருந்தேன். எங்கள் குடும்பத்தின் ஆணிவேராக இருந்த எம் தந்தையார் சிவ பதம் அடைந்து விட்டார். என் வாழ்க்கையே இருண்டு போய்விட்ட காலம் அது. சுமார் நான்கு தலைமுறையாக தேவாரம் திருவாசகம், திருவருட்பா பாடி சிவனாரை வழிபட்ட எங்கள் குடும்பம் எம் தந்தையாரை இழந்த பின்பு அனைத்தையும் இழந்ததாகவே இருந்தது. அடியேன் சிறு வருமானமே பிரதானம் என்று வாழ்க்கை நடத்தி கொண்டு இருந்தேன் .

சுவாமியின் புகைப்படம் :
இதற்கிடையில் எனது கம்பெனியின் முதலாளி நல்ல மனிதர் சற்குருவை தரிசித்து வந்து பழனி சுவாமிகளின் புகைப்படம் ஒன்றை எனக்கு தந்தார். அந்த புகைப்படத்தை வாங்கி பார்க்கும் போதே ஒரு நல்ல உணர்வு எனக்குள் தோன்றியது. அதன் பிறகு அதை வீட்டிற்கு எடுத்து சென்று வழிபட்டேன்.
சுவாமியின் தரிசனம்:
சில மாதங்கள் சென்ற பின்பு என்னுடன் வேலை பார்க்கும் நண்பரின் உறவினர் எனது நண்பரிடம் பழனி சுவாமிகள் பற்றி கூறி உள்ளார். சற்குரு நாதரின் அருள் ஆசியால் அவர் வாழ்கையில் ஞான மார்கத்தின் திறவுகோலாக அமைந்ததை பற்றி கூறி உள்ளார். இதை பற்றி என்னிடம் என் நண்பர் தெரிவித்தார். நாங்கள் இருவரும் சற்குரு நாதரை தரிசிப்பது என்று முடிவு செய்தோம். திங்கள் கிழமை போவது என்று முடிவு செய்து கொண்டு நான் வார விடுமுறைக்கு திருச்சி சென்று விட்டேன். அவர் கரூரில் இருந்து வருவதாக தெரிவித்தார். நாங்கள் இருவரும் அவர் அவர் ஊர்களில் இருந்து அதிகாலை புறப்பட்டு கனக்கன் பட்டி வந்து அடைந்தோம். சுவாமிகளுக்காக ஒரு போர்வை எடுத்து சென்றேன். கனக்கன் பட்டி பஸ் ஸ்டாண்ட் இல் டீ குடித்த பின்பு , சுவாமிகள் பற்றி அந்த டீ கடையில் விசாரித்தோம். சுவாமிகள் கொட்டகையில் இருக்கிறார் என்று தெரிவித்தனர் . சுவாமிகளின் படம் அந்த டீ கடையில் இருந்தது. சுவாமிகள் இருக்கும் கொட்டகை நோக்கி நடந்தோம் சுற்றி எங்கும் மலை , அதி காலை பனி , தென்னை மரங்கள் , விவசாய நிலங்கள் ஒரு அருமையான சூழலாக இருந்தது. ஒரு அரை மணி நேரம் பேசி கொண்டே நடந்து கொண்டு இருந்தோம். மனதில் சிறு பயம் வேறு இருந்தது சுவாமிகள் பார்த்த உடன் என்ன சொல்வாரோ. இதற்கெல்லாம் தகுதி உண்டா என்று மனதிற்குள் கேள்வி அவ்வபோது எழுந்து கொண்டு இருந்தது. ஷிர்டி சாய் நாதரையும் , காஞ்சி மஹா பெரியவாவையும் வேண்டி கொண்டு நடந்து கொண்டு இருந்தோம். அப்போது சிகப்பு நிற மாருதி வேன் எங்களை நோக்கி வந்து கொண்டு இருந்தது. அருகில் வந்தவுடன் தான் கவனித்தோம். மாருதி வேன் ஓட்டுனரின் பக்கத்தில் எளிமையின் உருவமாக அமர்ந்து இருந்தார். தரிசனம் கிட்டியது , எங்களை பார்த்த உடன் கையை அசைத்தவாரே எங்களை கடந்து சென்றார். எங்கள் இருவருக்கும் சுவாமியை தரிசனத்தால் கிடைத்த மகிழ்ச்சி ஒரு புறம் இருக்க அவரின் செய்கை ஒன்றும் புரியாததால் சற்று குழப்பத்துடன் சென்றோம்.

கொஞ்ச தூரம் நடந்து அவரின் கொட்டகையில் அமர்ந்தோம். எங்களுக்கு முன்னரே அங்கு இருவர் இருந்தனர். அவர்களிடம் பேசி கொண்டு இருந்தோம் சுவாமிகளை பற்றி மெய் மறந்து கேட்டு கொண்டு இருந்தோம். அந்த கொட்டகை விட்டு வெளியில் வந்து பார்த்தோம். சுற்றிலும் விவசாய நிலங்கள் , ஆங்காங்கே மரங்கள் , நேர் எதிர் திசையில் பெரிய மலை. பார்க்கவே சற்று பிரமிப்பாக இருந்தது.கொட்டகையின் வெளியில் உள்ள மரங்களை உற்று கவனித்தோம் ஒவ்வொரு மரங்களின் கிளைகளில் நூல்களில் கட்டி தொங்க விட பட்ட பாலிதீன் பைகள் , பாட்டில்கள் இருந்தன. அருகில் இருந்தவர்களிடம் விசாரித்தோம் இதை பற்றி அவர்கள் சொன்னார்கள், இது எல்லாம் எங்கு வரும் அடியவர்களின் பாவ மூட்டைகள் , இதை அவர் அவர்களின் கணக்கிற்கு ஏற்ப சுவாமிகள் தொங்க விட்டு உள்ளார் என்று கூறினர் . அவர் அமர்ந்து செல்கின்ற வேனுக்கு பின்னாலும் பெரிய பெரிய அழுக்கு மூட்டைகள் இருக்கும் என்றே தெரிவித்தனர். நாங்களும் பார்த்தோம் என்றே தலை அசைத்தோம். நேரம் ஆக ஆக கூட்டம் வந்து கொண்டு இருந்தது. படித்தவன் , பாமரன் , ஏழை , பணக்காரன் , சிறியவர் , பெரியவர் , உயர்ந்தோர் தாழ்ந்தோர் , நல்லோர் , தீயவர் என்ற இந்த ஒரு சிறு பாகுபாடும் சுவாமிகள் இடத்தில் இல்லை .அவரிடம் இல்லை என்ற வார்த்தை இது மட்டும் தான் என்பதில் அவரை வணங்கி வரும் அனைத்து அடியார்களுக்கும் நன்றே தெரிந்த ஒன்று. 

எல்லோரும் ஆங்காங்கே அமர்ந்து கொண்டு இருந்தோம். வெளியில் சென்ற சுவாமிகள் கொட்டகைக்கு வந்தார்கள். வேனில் இருந்து இறங்கி நாங்கள் உட்கார்ந்து இருக்கும் இடத்தின் அருகில் நடந்து கொண்டு இருந்தார்கள். அனைவரின் முகங்களை பார்த்து கொண்டு எது ஏதோ சொல்லி கொண்டு எங்கும் அங்கும் நடந்து கொண்டு இருந்தார்கள் .அவரின் பார்வை நம் அனைவரின் உள்ளத்தையும் ஊடுறுவி சென்று விடும் என்பதை நீங்கள் சென்று தரிசித்தால் உணர்வீர்கள் என்பதில் ஐயமில்லை. அவரே பார்த்து கொண்டே நம் கவலைகளை, நமக்கு இருக்கும் கஷ்டங்களை மனதிற்குள் நினைக்க சொல்லி சற்குருவின் முகம் பார்த்து வேண்ட சொன்னார்கள் அங்கு உள்ள அடியவர்கள். அவ்வாறே வேண்டி கொண்டு இருந்தேன். பிறகு மீண்டும் வேனில் ஏறி சென்று விட்டார்கள். இப்படி வருவதும் போவதும் ஆகவே இருந்தார்கள். வேனில் வந்தவுடன் நிறுத்தாமல் அனைவரையும் பார்த்து விட்டு திரும்பி செல்வார்கள். சில நேரங்களில் இறங்கி அனைவரையும் பார்த்து கொண்டு அங்கும்மிங்கும் நடப்பார்கள் . நேரமும் கடந்து கொண்டு இருந்தது அமர்ந்து கொண்டு பகவான் நாமத்தை சொல்லி கொண்டே இருந்தோம். மாலை ஆகி விட்டது. அதற்குள் ஒரு அன்பர் சுவாமிகள் கனக்கன் பட்டி நுழை வாயிலில் கொஞ்ச தூரத்தில் உள்ள அடியவர்களுக்கு வேலை கொடுத்து கொண்டு இருக்கிறார் என்றார்கள். சரி அப்படியே பார்த்து விட்டு செல்லலாம் என்று முடிவு எடுத்து சென்றோம். அங்கு சென்றவுடன் ஒருவர் சற்குருவின் கால்களை அமுக்கி விட்டு கொண்டு இருந்தார் , நிறைய பேர்களை மண் வெட்டி போட சொல்லி கொண்டி இருந்தார்கள்.மற்றும் சிலரை பார்த்து கற்களை தூக்கி வேறு இடத்தில் வைக்க சொல்லிக்கொண்டு இருந்தார்கள், வேறு சிலரை குப்பை மேட்டினை கரைக்க சொல்லி கொண்டு இருந்தார்கள். நாங்கள் இருவரும் சென்றோம். என் கூட வந்தவரை மண்ணை அள்ளி போட சொன்னார்கள். நான் கையில் கொண்டு வந்த போர்வை அவரிடம் கொடுப்பதற்காக அவர் அருகில் சென்றேன். என்னை பார்த்துடன் பெரும் கோபத்துடன் கெட்ட வார்த்தையில் திட்டினார்கள். மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். அழுதும் விட்டேன் . கைகளை நீட்டி மேற்கே போ என்றார்கள். கை காட்டிய இடத்தில் போய் நின்றேன் .திரும்பவும் கைகளை நீட்டி தெற்கே போ என்றார்கள். காலையில் இருந்து ஒரு வேலையும் செய்யாமல் இருக்கிறான் என்றார்கள். எந்த வார்த்தை என்னை மிகவும் பாதித்தது. ஏன் என்றால் அனைவரும் வணங்கும் சற்குருவின் முன்னால் நான் மட்டும் திட்டு வாங்கியது என்னை மிகவும் பாதித்தது. யாருக்கும் மனதளவில் கூட தீங்கு நினைத்தது இல்லையே என்று அழுகையை அடக்க முடியாமல் அங்கு இருந்து சென்றேன். நான் வணங்கிய அனைத்து தெய்வங்களையும் எனக்கு ஏற்பட்டதை நினைத்து திட்டி தீர்த்து விட்டேன். மீண்டும் மீண்டும் அவர் சொன்ன அந்த வார்த்தைகள் என் மனதிற்குள் ஒலித்து கொண்டு இருந்தது. கொஞ்சம் தூரம் நடந்து வந்து அங்கு ஒரு மாட்டு கொட்டகைக்கு அருகில் நின்று கொண்டு அழுது கொண்டு என்னுடன் வந்தவருக்காக காத்து கொண்டு இருந்தேன்.சிறிது நேரம் கழித்து அவர் வந்தார். அவருடன் சேர்த்து அங்குள்ள அனைவரும் வந்தனர். அவரை பார்த்த உடன் மிகவும் அழுதுவிட்டேன். அவர் எனக்கு ஆறுதல் சொன்னார். அப்போது ஒரு வயதான பாட்டி என் அருகில் வந்து உன்னை சுவாமி திட்டியதற்காக வருத்த படதே தம்பி . ஏன் என்றால் அவர் முன்பு திட்டி பின்பு அணைத்து கொள்வார்கள் என் வாழ்விலும் அதுவே நடந்தது என்று ஆறுதல் சொன்னார்கள். பிறகு என்னுடன் வந்தவரிடம் எனக்கு மனதிற்கு கவலையாக உள்ளது பழனி சென்று முருகனை தரிசித்து விட்டு வருகிறேன் என்று பழனி பஸ்சில் சென்றேன். 
பஸ்சில் இருந்த சிலர் சுவாமிகளிடம் வந்தவர்கள் அவர்கள் என்னை ஒருவாறு பார்க்க எனக்கு வெட்கமும் அழுகையாக வந்தது. அதே கவலையுடன் பழனி சென்றேன். பக்தர்களின் கூட்டம் அதிகமாக இல்லை. பழனி முருகனின் அர்த்தஜாம அபிஷேகம் முடிந்து தீபாராதனை காட்டினார்கள் . முருகனை பார்த்த உடன் கதிறி விட்டேன் என்னை அறியாமல். அருகில் இருந்தவர்கள் ஒரு மாதிரி பார்க்க அழுகையை அடக்கி கொண்டேன்.

பழனி சித்தரிடம் அனுப்பிய பழனி சுவாமிகள் :

தரிசனம் முடிந்து வலம் வந்து கொண்டு இருந்த போது என்னை அறியாமல் அங்கு வயது உள்ள இரண்டு நண்பர்களிடம் நடந்ததை விவரித்தேன். நான் என்ன மன நிலையில் அப்படி சொன்னேன் என்று எனக்கே தெரியவில்லை. அவர்கள் என்னை ஆறுதல் படுத்தி நீங்கள் பழனி அடிவாரத்தில் பழனி சித்தர் ஒருவர் இருக்கிறார் அவரை சென்று பாருங்கள் என்று சொன்னார்கள். எனக்கு பயம் வேறு எப்பொழுது தான் ஒருவரிடம் திட்டு வாங்கினேன். மீண்டும் என்றால் என் மனம் தாங்காது என்றேன். அதற்கு அவர்கள் சொன்னார்கள் அவர் யாரிடமும் பேச மாட்டார்கள் என்று சொன்னார்கள். மனதை தேற்றி கொண்டு சென்றேன். மெல்ல அவர் இருக்கும் இடத்தை விசாரித்து கொண்டு அவர் இருக்கும் இடம் நோக்கி சென்றேன். நீண்ட தெரு ஓரத்தில் ஒரு சிறிய குடிசை ஒருவாறு ஒருக்களித்து உட்கார்ந்து கொண்டு இருந்தார்கள். அவரை பார்த்துடன் ஒரு ஓரத்தில் அவரை பார்த்த மாதிரி உட்கார்ந்தேன். என்னை வேகமாக திரும்பி பார்த்தார்கள். அவரின் நீண்ட தலை முடியெல்லாம் பறந்து அவரின் முதுகில் விழுந்தது. என்னை கூர்ந்து பார்த்தார்கள். அவரின் அந்த பார்வையில் நடுங்கி விட்டேன். பிறகு மீண்டும் சுய நிலைக்கு வந்து மனதிற்குள் அன்று காலையில் இருந்து அன்று இரவு முழுவதும் நடந்தவை அனைத்தையும் மனதிற்குள் அவரிடம் சொன்னேன். அதன் பின்பு என் கஷ்டங்களை மனதிற்குள் நினைத்து வேண்டினேன். ஒரு கால் மணி நேரம் கடந்து இருக்கும் அப்போது தரையை தன் கைகளால் ஓங்கி அடித்தார்கள். தீடிரென்று அவரின் செய்கையால் சற்றே நடுங்கி விட்டேன். அதற்குள் அங்கு இருந்த டீ கடை காரர் என்னை பார்த்து கேட்டார். இந்நேரம் பழனி சித்தர் தூங்கி இருப்பார்கள் ஆனால் வெகு நேரம் உட்கார்ந்து கொண்டு இருந்தார்கள் ஏன் என்று தெரிய வில்லை என்றார்.யாரோ தரிசனத்துக்காக இன்று வர போகிறார்கள் நினைத்து கொண்டு இருந்தோம் ஏன் என்றால் நான் எப்போதே அவருக்கு போர்த்திகொள்ள போர்வை வைத்து விட்டேன் இருந்தும் வெகு நேரம் உட்கார்ந்து இருந்தார்கள் பார்த்தால் நீ வந்து நிற்கிறாய் என்று தெரிவித்தார்கள். எனக்கு இப்போது மனதிற்குள் இதமான மாற்றத்தை உணர முடிந்தது. எனக்கு உடனே போர்வை ஞாபகம் வந்தது .அவரிடம் நடந்தவற்றை விவரித்தேன். சரி நீ கவலை படாதே என் கூட வா என்று கூட்டி சென்று உள்ளே வந்து சுவாமிகள் பக்கத்தில் இருக்கும் திரு நீறு எடுத்து பூசி கொள்ள சொன்னார். அதற்கு முன்னர் அவர் சொன்னார் பாவிகள் யாரவது உள்ளே வந்தால் அடிப்பார் என்றார். மீண்டும் மனதிற்குள் பயங்கர கலக்கம். எப்பொழுது தான் திட்டு வாங்கி வந்து இருக்கிறேன். அடி வேறு வாங்கி விட்டால் அதற்கு மேல் வாழ்வதற்கு அர்த்தமே இல்லை என்றே நினைத்து தயங்கினேன். அவர் விடா பிடியாக கூட்டி சென்றார். ஒரு வித தயக்கத்துடனே உள்ளே சென்றேன். அந்த டீ கடைக்காரர் பயபடாதே உள்ளே வா என்று எனது அச்சம் கலைத்தார். உள்ளே வந்த என்னை திருநீறு அள்ளி பூசி கொள்ள சொன்னார். மனதிற்குள் சித்தரை நன்றாக வேண்டி கொண்டு திருநீற்றினை அள்ளி பூசி கொண்டேன் .என்னை தன் பார்வைகளை கூர்மையாக்கி என்னை உற்று நோக்கினார்கள். அப்பொழுதே எனக்குள் பெரிய மாற்றத்தை உணர்தேன் .பிறகு வெளியில் வந்தோம். சித்தர் உறங்குவதற்காக படுத்துக் கொண்டார்கள். போர்வை பற்றி கூறினேன். என்னிடம் இருந்து போர்வையை வாங்கி கொண்டு அவர் சொன்னார் நான் இதை அவர் மீது போர்த்தி விடுகிறேன் போர்த்தி கொண்டால் நல்லது விசிவிட்டால் வீட்டிற்கு எடுத்து சென்று வழிபடு என்று கூறினார். அவர் போர்த்தி விட்டார் . அவர் இரண்டவது கூறியதே இறுதியில் நடந்தது. சித்தர் அதை எடுத்து விசி விட்டார்கள். பிறகு அவர் என்னிடம் சொன்னார் பராவில்லை தம்பி நீ கொடுத்து வைத்தவன் தான் ஏன் என்றால் சுவாமிகள் உடம்பின் மீது போர்த்திய போர்வையை நீ வீட்டில் வைத்து வழிபட உனக்கு கிடைத்ததே பெரும் பாக்கியம் அல்லவா என்று கூறினார் . எனக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.இன்றும் அவரின் ஆசிர்வாதமாக நினைத்து வீட்டில் வைத்து வழிபடுகிறேன். அதன் பிறகு அவரிடம் நன்றி கூறி விடை பெற்று மீண்டும் ஒரு முறை சுவாமியை வணங்கி விடை பெற்றேன். நடந்த சம்பவத்தை எண்ணி வாழ்க்கைய நகர்த்தி கொண்டு இருந்தேன்.சில மாதங்கள் சென்றது. பிறகு ஒரு நாள் பழனி சித்தர் என் கனவில் வந்து கூறினார்கள்.உன் நல்லதுக்கு தாண்டா தரையில் ஓங்கி அடித்தேன் என்று கூறினார்கள். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பழனி மூட்டை சுவாமிகள் என்னை திட்டியர்தற்கான காரணமும் அதனால் ஏற்பட்ட சித்தர் ஆசிர்வாதமும் எனக்கு பரம திருபித்தியை அளித்தது. இங்கே அடியேன் புரிந்து கொண்ட விஷயம் என்னவென்றால் மற்றவர்கள் பார்வைக்கு அவர் திட்டியது மாதிரி அவர் காலையில் இருந்து சும்மா உட்கார்ந்து இருக்கிறான் என்று கூறினார்கள். ஆனால் அதன் பின்பு அடியேனுக்கு கிடைத்த பாக்கியத்தை அவர் மட்டுமே அறிந்து இருந்தார்கள். அதன் பிறகு என் வாழ்கையில் படிப்படியான முன்னேற்றங்கள். என் தங்கைக்கு திருமணம் பழனியில் நடந்தது. எனக்கும் வெளிநாட்டில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்தது.நான் வாங்கி இருந்த கடனும் பெருமளவு அடைத்து விட்டேன்.இப்பொழுது பழனி சுவாமிகள் மற்றும் பழனி சித்தர் அருளால் நன்றாக இருக்கிறேன். இவை அனைத்தும் அன்று என்னை வழி நடத்திய சற்குரு பழனி சுவாமிகளையும், பழனி சித்தரையும் சேரும் என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை.

அனைவரும் அவரை வணங்கி நலம் பெற வேண்டுகிறேன்.
பழனி சித்தரிடம் எனக்கு அருள் பெற்று தந்த அன்பரின் தொலைபேசி எண் : 9442883697 அவர் பெயர் லயன் ராஜேந்திரன். விவரித்த நிகழ்ச்சியை ஞாபக படுத்தவும். 

1. ஓம் அறிவின் சொருபமான சற்குருவே போற்றி
2. ஓம் அன்பிற்கு அழியான சற்குருவே போற்றி
3. ஓம் அண்டமெல்லாம் நிறைந்து இருக்கும் சற்குருவே போற்றி
4. ஓம் அருவமாய் மறைந்து இருக்கும் சற்குருவே போற்றி
5. ஓம் அருளொளியை தந்தருளும் சற்குருவே போற்றி
6. ஓம் அன்னதான தெய்வமான சற்குருவே போற்றி
7. ஓம் அச்சம் தீர்க்க வந்த சற்குருவே போற்றி
8. ஓம் அன்டினோர்க்கு இன்பம் தரும் சற்குருவே போற்றி
9. ஓம் அருட்குருவாய் காட்சி தரும் சற்குருவே போற்றி
10.ஓம் ஆதி முதல்வரான சற்குருவே போற்றி
11.ஓம் ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும்ஜோதி ஆண்டவரே போற்றி!!  
    போற்றி!!!

எல்லாம் வல்ல சற்குரு ஞான வள்ளல் பழனி மூட்டை சுவாமிகள் மலரடிகள் போற்றி!!போற்றி!! 
அருள்மிகு பழனி சித்தர் மலர் அடிகள் போற்றி!! போற்றி !!!

பிழை இருப்பின் அடியனே மன்னிக்கவும் சற்குரு நாதரே.
இப்படிக்கு,
பழனி மூட்டை சுவாமிகள்,பழனி சித்தர் அடியேன்
சாய்ராம் செல்லப்பன்.
மாலத்தீவு.
facebook link

ஓம் ஷிர்டி சாய் நாதாய நமஹ
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி
தனிபெரும்கருணை அருட்பெரும்ஜோதி.

Regards,
Admin
http://www.siddhayogi.in/

No comments:

Post a Comment

Please share your comments and queries